இத்தலப் பெயர் நாட்டுவியத்தான் என்பதன் மரூஉ. அதற்கு நாட்டை ஏவுவோன், அதாவது நாட்டைக் காப்பவன் என்று பொருள். பின்னர் நாளடைவில் 'நாட்டியத்தான்குடி' என்று ஆனது. சோழ மன்னன் ஒருவன் வைத்திருந்த இரத்திரனங்களை, இறைவன் ரத்தின வியாபாரியாக வந்து மதிப்பிட்டதால் இத்தலத்து மூலவர் 'மாணிக்கவண்ணர்' என்றும், 'ரத்னபுரீஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார்.
மூலவர் 'ரத்னபுரீஸ்வரர்', 'மாணிக்கவண்ணர்' என்னும் திருநாமங்களுடன், அழகிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'மங்களாம்பிகை', 'மாமலர்மங்கை' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள்.
கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் வழிகாட்டிய விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமண்யர், காசி விஸ்வநாதர், கோட்புலி நாயனார், மகாலட்சுமி, நவக்கிரகங்கள் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.
சுந்தரமூர்த்தி நாயனார் இத்தலத்திற்கு வந்தபோது சுவாமியும், அம்பாளையும் காணாததால், விநாயகரிடம் விசாரிக்க, அவரும், அருகில் உள்ள வயலில் நெல் நடவு செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சுட்டிக் காட்டினார். அதனால் கோயில் கோபுரத்திற்கு வெளியில் உள்ள விநாயகருக்கு 'கை காட்டு மூர்த்தி' என்ற திருநாமம் ஏற்பட்டது. தற்போதும் இந்த வயல் 'கோழி மேய்த்தான் கட்டளை' என்ற பெயரில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் இந்த 'நடவுத் திருவிழா' கொண்டாடப்படுகிறது.
அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான கோட்புலி நாயனார் அவதாரத் தலம். தனது இரு மகள்களையும் சுந்தரருக்கு பணிவிடை செய்ய அனுப்ப, அவர்களை சுந்தரர் தமது மகளாக ஏற்றுக் கொண்ட தலம். சிவபெருமானுக்கு படைப்பதற்காக சேமித்து வைத்திருந்த நெல்லை, தமது குடும்பத்தார் எடுத்து உபயோகப்படுத்தியதற்காக அவர்களை கொன்று, பின்னர் சிவபெருமான் காட்சி தந்து நாயனாருக்கும் முக்தி அளித்த தலம்.
யானை ஒன்று இத்தலத்தில் தீர்த்தம் உண்டாக்கி, சிவபூஜை செய்து முக்தியடைந்ததால் இத்தலத்து மூலவருக்கு 'கரிநாதேஸ்வரர்' என்ற திருநாமமும் உண்டு. யானை உண்டாக்கிய தீர்த்தம் கோயிலின் பின்புறம் 'கரி தீர்த்தம்' என்ற பெயருடன் உள்ளது.
சுந்தரர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|